
நாட்டின் மொத்த சனத்தொகையை ஒரு கோடிக்குள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் வாக்கெடுப்பு இன்று (14) நடைபெறுகிறது.
குடியேற்றக் கொள்கை, பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான சுவிட்சர்லாந்தின் உறவுகள் தொடர்பில் பரவலான அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ள இந்த வாக்கெடுப்பு, நாட்டின் எதிர்காலக் கொள்கை திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
வலதுசாரி அரசியல் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி ஆதரவில் முன்னெடுக்கப்படும் இந்த முன்மொழிவு, வீட்டு வசதி, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக ஆதரவாளர்களால் விளக்கப்படுகிறது.
எனினும், சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கம், பிரதான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிக அமைப்புகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக சுகாதாரம், சுற்றுலா மற்றும் சேவைத் துறைகள் வெளிநாட்டு பணியாளர்களை பெருமளவில் சார்ந்துள்ள நிலையில், இந்த முன்மொழிவு அமல்படுத்தப்பட்டால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக வணிகத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியம் உடனான மக்கள் சுதந்திர நடமாட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுவிட்சர்லாந்து அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
2002 ஆம் ஆண்டில் சுமார் 73 இலட்சமாக இருந்த சுவிட்சர்லாந்து நாட்டின் சனத்தொகை தற்போது 91 இலட்சத்தை எட்டியுள்ளது. அதில் சுமார் 27 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்களாக உள்ளனர்.
இந்த வாக்கெடுப்பின் முடிவு, சுவிட்சர்லாந்தின் எதிர்கால குடியேற்றக் கொள்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை தீர்மானிக்கும் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
