உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (12) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா ரத்து செய்ததைத் தொடர்ந்து, சந்தைகளில் நிலவிய பதற்றம் குறைந்ததே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

நேற்று (11) அமெரிக்க டொலர் 90 எல்லையைத் தாண்டியிருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இன்று மீண்டும் அந்த மட்டத்திற்குக் கீழ் சரிந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89.33 அமெரிக்க டொலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் 87.25 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 86.74 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்கா நேற்று ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளத் தயாராகியிருந்ததாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றநிலை தீவிரமடைந்தது.
இதற்கு பதிலடியாக, உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகளை ஈரான் முன்னெடுத்ததாகக் கூறப்பட்டது. இதன் தாக்கமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக உயர்வடைந்தன.
அதன்படி, நேற்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.47 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 95.40 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் 2.89 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 92.63 அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தது.
எனினும், அமெரிக்கா தனது இராணுவத் தாக்குதல் திட்டங்களை கைவிட்டதைத் தொடர்ந்து சந்தைகளில் உருவான சுமுகமான சூழ்நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை குறுகிய காலத்திலேயே மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
