இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் கடுமையான விரிவுரையாளர் பற்றாக்குறை காரணமாக உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளின் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அரச பல்கலைக்கழகங்களில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறம்பட செயல்படுவதற்கு 12,000 முதல் 13,000 வரையிலான நிரந்தர விரிவுரையாளர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதனுடன் மேலும் சுமார் 4,000 தற்காலிக விரிவுரையாளர்களும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், 2025 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இணைந்து வெறும் 6,800 நிரந்தர விரிவுரையாளர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், குறைந்தபட்சம் 8,000 நிரந்தர விரிவுரையாளர்களாவது இருந்தால்தான் பல்கலைக்கழக அமைப்பு சுமுகமாக இயங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
துறை வாரியான உகந்த மாணவர் – விரிவுரையாளர் விகிதாச்சாரத்தை விளக்கிய அவர், நிர்வாகத் துறையில் 18 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 10 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளரும், கால்நடை அறிவியல் மற்றும் பல் மருத்துவத் துறைகளில் 5 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளரும் இருக்க வேண்டும் என்றார்.
மேலும், ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30 வரையிலான விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அமைப்பை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார். புதிதாக இணைவோர் பெரும்பாலும் இளம் தகுதிகாண் விரிவுரையாளர்களாக இருக்கும் நிலையில், வெளியேறுபவர்கள் பல வருட அனுபவம் கொண்ட பேராசிரியர்கள் என்பதால் கல்வித் தரத்தில் பாதிப்பு ஏற்படுவதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு 1,400 விரிவுரையாளர் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் சுமார் 48 முதல் 49 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்த பிரச்சினை தீவிரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புதிய நியமனங்களில் பலவும் உண்மையான புதிய சேர்க்கைகளாக இல்லாமல், வெளி மாகாண பல்கலைக்கழகங்களில் இருந்து நகர்ப்புற பல்கலைக்கழகங்களுக்கு இடம்பெறும் இடமாற்றங்களாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விரிவுரையாளர்களுக்கு 36 சதவீதம் வரை வருமான வரி விதிக்கப்படுவதோடு, அவர்களின் 20 சதவீத ஆராய்ச்சி கொடுப்பனவுக்கும் வரி அறவிடப்படுவதால் புதிய ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான ஆர்வம் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஓய்வுபெறும் விரிவுரையாளர்களுக்குப் பதிலாக புதிய நியமனங்களை மேற்கொள்வதில் தற்போது மேலாண்மை சேவைகள் திணைக்களத்தின் அனுமதி அவசியமாக இருப்பதால் பல மாதங்கள் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் பல்கலைக்கழகங்களை ஓரளவு இயக்க முடிந்தாலும், வழங்கப்படும் பட்டங்களின் தரம் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்த அவர், அதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாவிட்டாலும், அடுத்த சில ஆண்டுகளில் பட்டதாரிகளின் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் மனிதவள வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார்.
