ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட தகவலின்படி, விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியில் இருந்த இரு பணியாளர்களும் அமெரிக்க கடற்படையின் ஆளில்லா விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM, கிழக்கு நேரப்படி மாலை 5 மணியளவில் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஈரானின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை அருகே உலங்குவானூர்தி விழுந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அது நேரடியாக தாக்கப்பட்டதா அல்லது வேறு காரணத்தால் விபத்துக்குள்ளானதா என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், அமெரிக்க தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஹோர்மோஸ்கான் மாகாணம் பகுதியில் உள்ள குஹிஸ்டாக், சிரிக் மற்றும் மினாப் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழலை மேலும் பதற்றமடையச் செய்துள்ளதுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
