பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தமிழ் ஹிப் ஹொப் கலைஞரான சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு, பெட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 வயதான சங்கீத்சன், விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு கலைஞர் தனது அடையாளத்தையும் கருத்துகளையும் வெளிப்படுத்தியதற்காக கைது செய்யப்படுவது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படைக் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக பல அரசாங்கங்கள் வாக்குறுதி அளித்த போதிலும், மாற்றுக் கருத்துக்களை ஒடுக்குவதற்கான கருவியாக அது தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழர்கள் இன்னும் இராணுவக் கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறைச் சூழலில் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பிரம்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் போன்ற நினைவுகூரல் முயற்சிகளின் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சர்வதேச மன்னிப்புச் சபை, பயங்கரவாதத் தடைச் சட்டம் சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு முரணானது எனக் குறிப்பிட்டு, முறையான குற்றச்சாட்டுகள் இன்றி கைது செய்யப்பட்டுள்ள சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், முன்னாள் அரச புலனாய்வுத் துறை பிரதானியான சுரேஷ் சாலி உள்ளிட்டோரின் கைது நடவடிக்கைகளிலும் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, தன்னிச்சையான கைதுகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
