யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளரான தயாளினி திலீபன் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிலேயே கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக நீதிவான் எஸ். லெனின்குமார் தெரிவித்தார்.
வழக்கின் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியலையும் அதே திகதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டுதலின் கீழ் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகினார்.
முதலாம் சந்தேகநபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஆஜராகியிருந்தார். இரண்டாம் சந்தேகநபரான மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டுதலின் கீழ் சட்டப் பிரதிநிதிகள் முன்னிலையாகினர்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஜூன் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
