இலங்கை கடற்பரப்பில் ஏற்படக்கூடிய எண்ணெய் மற்றும் அபாயகரமான இரசாயன கசிவுகளால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் புதிய தேசிய செயற்திட்டம் மற்றும் டிஜிட்டல் தளத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள முக்கிய கிழக்கு-மேற்கு கடல் வர்த்தகப் பாதையில் தினசரி 400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிப்பதுடன், ஆண்டுதோறும் 5,000-க்கும் அதிகமான கப்பல்கள் உள்ளூர் துறைமுகங்களை வந்தடைகின்றன. இதனுடன் துறைமுக விரிவாக்கம், எண்ணெய் சார்ந்த நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை கடல்சார் அபாயங்களை அதிகரித்துள்ளன.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தற்போதுள்ள தேசிய எண்ணெய் கசிவு தடுப்புத் திட்டத்தை புதுப்பித்துள்ளது. புதிய திட்டத்தில் அபாயகரமான மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன கசிவுகளையும் கையாளக்கூடிய ஏற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடல் மாசுபாடு சம்பவங்களை விரைவாகக் கண்காணித்து, அவற்றுக்கு திறம்பட பதிலளிக்கும் வகையில் டிஜிட்டல் தளமொன்றின் முதற்கட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், கடல் மாசு சம்பவங்களை எதிர்கொள்ளும் தேசிய திறனை வலுப்படுத்துவதற்குமான இந்த முன்மொழிவை சுற்றுச்சூழல் அமைச்சர் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
