19வது இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்த அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

நேற்று (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 155 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணிக்காக வாஷிங்டன் சுந்தர் அரைச்சதம் அடித்து 50 ஓட்டங்களைச் சேர்த்தார்.
156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றியை உறுதி செய்தது.
அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய விராட் கோலி, ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பதிவு செய்து சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
