இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெடித்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள அமெரிக்க–ஈரான் ஒப்பந்தத்தில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்புகளை அகற்றுவது தொடர்பான அம்சங்களிலேயே இந்த மாற்றங்கள் கோரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த தகவல்கள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், ஈரானின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படாத எந்த ஒப்பந்தத்தையும் தெஹ்ரான் ஏற்காது என ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் நேற்று வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான கட்டமைப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மூத்த ஆலோசகர்களும் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். இருப்பினும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஒப்பந்த வரைவு 60 நாட்கள் வன்முறைகளை நிறுத்துதல், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேறுமானால், ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சில பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படலாம் என்றும், இதன் மூலம் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான சொத்துக்களை ஈரான் மீண்டும் அணுகும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் சிபிஎஸ் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
