ஒழுக்காற்று விதிமீறல்கள் காரணமாக சுமார் 400 முதல் 500 வரையான சாரதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பான விவகாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சில சாரதிகள் வேறு வழிகளில் வருமானம் ஈட்டிவருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், பல்வேறு சட்ட ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுகளின்படி அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், சிலர் தனியார் பேருந்துகளில் சாரதிகளாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்ட நிலையில், தேவையான சட்ட ஆலோசனைகளை உடனடியாகப் பெற்று, ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனுடன், போக்குவரத்துத் துறையின் சட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கையும், புகையிரத திணைக்களத்தின் சேவைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையும் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.
நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தியதுடன், அவற்றுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
