
பாடசாலை பேருந்தும் பாரவூர்தியும் மோதி மாணவன் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சுமார் 7.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் வீதி வழுக்கலாக காணப்பட்ட நிலையில் பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நேர்ந்தபோது பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 20 பேர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பேருந்தும் பாரவூர்தியும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலை நிலவும் சூழலில் வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நோர்வூட் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
