
தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் குறைவு காரணமாக, மக்கள் பசியின் கொடுமையில் தங்களது குழந்தைகளையே விற்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் பெரும்பாலான மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் 4.7 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் வாழ்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோர் மாகாணத்தில் தினமும் வேலை தேடி நூற்றுக்கணக்கானோர் கூடும் நிலையில், பல குடும்பங்கள் பல நாட்கள் உணவின்றி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
45 வயதான ஜூமா கான் என்ற தொழிலாளி, கடந்த ஆறு வாரங்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததாகவும், தனது பிள்ளைகள் பசியுடன் உறங்கியதாகவும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
இந்த கடும் வறுமை காரணமாக, சில பெற்றோர் தங்களது மகள்களையே திருமணம் அல்லது வீட்டு வேலைக்காக விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். “ஒரு குழந்தையை விற்றாலாவது மற்ற பிள்ளைகளை காப்பாற்ற முடியும்” என பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச நிதியுதவிகள் குறைந்துள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் நீடிக்கும் கடும் வறட்சியும் நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதற்கிடையில், மருத்துவமனைகளில் உணவுக்குறைபாடு மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும், பல குழந்தைகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ பணியாளர்கள் கூறுகையில், நாளொன்றுக்கு பல குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தற்போது சாதாரணமாக மாறியுள்ளதாக வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
