அமெரிக்காவில் இடம்பெற்ற விமானக் கண்காட்சியின் போது, நடுவானில் இரண்டு போர்விமானங்கள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து EA-18G Growler ரக விமானங்கள் வான்வழி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்றதாக அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கண்காட்சி நிகழ்வுகள் உடனடியாக இரத்து
ஐடஹோ மாநிலத்தின் மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்திலிருந்து சுமார் 3.2 கி.மீ தொலைவில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானக் கண்காட்சியின் மீதமுள்ள நிகழ்வுகள் உடனடியாக இரத்து செய்யப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விமானப்படைத் தளம் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானிகள் மருத்துவ பரிசோதனையில்
விபத்துக்குப் பிறகு விமானக் குழுவினரை மருத்துவப் பணியாளர்கள் பரிசோதித்து வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்கள் காயமடைந்தார்களா என்பது இதுவரை உறுதியாகவில்லை.
உயர்மதிப்புள்ள ராணுவ விமானங்கள்
EA-18G Growler விமானங்கள் வோஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த மின்னணு தாக்குதல் படைப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டவை. ஒவ்வொரு விமானத்தின் மதிப்பு சுமார் 67 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது.
விசாரணை ஆரம்பம்
இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய விமானக் கண்காட்சியிலும் 2018ஆம் ஆண்டு இதே நிகழ்வில் ஒரு விபத்து இடம்பெற்று உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
