
தோட்டத் தொழிலாளர்களுக்கான தினசரி சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதன்படி, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும் தொழில் அமைச்சும் சார்ந்த பொறுப்பான அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மலையக சமூகத்தையும் தோட்டத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அறிவித்துள்ள தினசரி சம்பளம் தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்பதே முறைப்பாடுகளின் முக்கிய அம்சமாகும்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
