அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி முதல் வரி வலையை விரிவுபடுத்துதல், வரி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய வரி மாற்றங்களின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) வரிச் சட்டகத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளதாகவும், நிதிச் சேவைகள் அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், டிஜிட்டல் பொருளாதாரமும் பெறுமதிசேர்வரி அமைப்பின் கீழ் சேர்க்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த இணக்கப்பாட்டு கடமைகள் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் சாதாரண சீர்திருத்தங்கள் அல்ல; மாறாக பொருளாதாரத்தை பாதிக்கும் ‘பறிப்பு’ என அவர் விமர்சித்துள்ளார். அதிக வரிகளை விதிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது என்றும், வணிகங்கள் செயல்படுவதற்கான இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இல்லையெனில், இறுதியில் வரி விதிக்கக்கூடிய ஆதாரமே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
