
ஐபிஎல் 2026 தொடரில் காயம் காரணமாக கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, எதிர்வரும் புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 12ஆம் திகதி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு தசைநார் காயம் (Hamstring Injury) ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு எதிரான முக்கியப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இந்தியா டுடே வெளியிட்டுள்ள தகவலின்படி, ரோஹித் சர்மா தற்போது தனது பயிற்சியின் தீவிரத்தை அதிகரித்துள்ளார். வலைப்பயிற்சியின் போது எந்தவித அசௌகரியமும் இல்லாமல் அவர் நன்றாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சென்னை அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் நடைபெற்ற விருப்பப் பயிற்சியில் (Optional Training) அவர் பங்கேற்று, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ரோஹித் சர்மா இல்லாத காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வரிசையில் பல மாற்றங்களை முயற்சித்தது. குயிண்டன் டி கொக் 112 ஓட்டங்கள் குவித்து சிறப்பாக விளையாடினாலும், இளம் வீரர் டேனிஷ் மலேவார் கடந்த இரண்டு போட்டிகளில் வெறும் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
தற்போது புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
காயமடைவதற்கு முன், மும்பை அணியின் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக ரோஹித் சர்மா இருந்தது குறிப்பிடத்தக்கது.
