
தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் தொடருந்து சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாத்துவ பகுதியில் ‘சாகரிகா’ தொடருந்து தடம் புரண்ட சம்பவத்தையடுத்து, அதில் தொடர்புடைய நான்கு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“சாகரிகா தொடருந்து தடம் புரண்டதற்காக சாரதி உள்ளிட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்தாலும் நிர்வாகம் அவர்களைப் பணியில் அமர்த்தவில்லை. இது திட்டமிட்ட தவறு அல்ல,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் இயங்கும் தொடருந்துகளில் சுமார் 80 சதவீதம் வேக அளவீட்டு கருவிகள் சரியாக செயல்படவில்லை என்றும், தண்டவாளங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுவரை காலம் ஓட்டுநர்கள் தமது வேலைப் பாதுகாப்பை பணயம் வைத்து நேரத்துக்கு தொடருந்துகளை இயக்கியதாகவும், இனி அவ்வாறு செய்ய முடியாது என்பதால் வேகக் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுவதால் சேவைகள் தாமதமாக இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குறைபாடுகள் உள்ள தொடருந்துகளை சரிசெய்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், இல்லையெனில் சில தொடருந்துகளை இயக்குவதிலிருந்து விலக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
