இலங்கையின் அண்மைய தொகைமதிப்பு தரவுகள், நாட்டின் மொத்த மொழியறிவு மட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன. இருப்பினும், பறங்கியர் சமூகத்தினரிடையே ஆங்கில மொழியறிவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி முக்கிய கவலையாக மாறியுள்ளது.
2012 முதல் 2024 வரை இலங்கையின் மொத்த ஆங்கில மொழியறிவு 30.8% இலிருந்து 57.3% ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலப்பகுதியில் பறங்கியர் சமூகத்தில் ஆங்கில அறிவு 97.4% இலிருந்து 79.3% ஆகக் குறைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், அந்த சமூகத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழியறிவு அதிகரித்துள்ளது. சிங்கள மொழியறிவு 77.0% இலிருந்து 81.8% ஆகவும், தமிழ் மொழியறிவு 29.1% இலிருந்து 53.8% ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த மாற்றங்களுக்கு நேரடி காரணம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை. எனினும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற பலர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்திருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் பயன்படுத்திய மூத்த தலைமுறையினர் குறைந்து வருவது மற்றும் இளம் தலைமுறையினர் உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
அத்துடன், பறங்கியர் சமூகத்தினர் சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்களுடன் கலந்துவாழும் சூழல் மற்றும் கல்வி அமைப்பின் தாக்கம் காரணமாக உள்ளூர் மொழிகளில் அதிக தேர்ச்சி பெறுகின்றனர்.
தேசிய அளவில் பார்க்கும்போது, இலங்கையின் மொத்த மொழியறிவு 97.4% என்ற உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டில் மொழி கல்வி பரவலாக வளர்ச்சி பெற்றுள்ளதையும், பல மொழிகளில் தேர்ச்சி அதிகரித்து வருவதைவும் இந்த தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
