
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தொடர்ச்சியான பதற்றம் காரணமாக, உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையால் மசகு எண்ணெய் விலை இன்று அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் ரக எண்ணெய் விலை 106.80 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது கடந்த புதன்கிழமை பதிவான விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 சதவீத உயர்வாகும்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டி, வர்த்தகக் கப்பல்களை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.
உலகளவில் கடல் வழியாக கடத்தப்படும் மசகு எண்ணெயில் சுமார் 30 சதவீதம் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே சென்றடைகிறது.
தற்போதைய விநியோகத் தடையால், குறிப்பாக ஆசிய நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் இந்த தடையால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தினமும் 10.1 மில்லியன் பீப்பாய்கள் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
