
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ், புதிய அரசாங்க மாதிரி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசுத் துறைகள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் 50 சதவீதத்தை ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) எனப்படும் தன்னாட்சி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சி குறித்து பிரதமர் ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தனது ‘X’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் விளக்கமளித்துள்ளார். தன்னாட்சி செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மூலம் இவ்வளவு பெரிய அளவில் அரசாங்கத்தை இயக்கும் உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு என்பது இனி ஒரு கருவி மட்டுமல்ல; அது தரவுகளை பகுப்பாய்வு செய்து, முடிவெடுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தி, தன்னைத்தானே தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளும் திறன் பெற்றது. இது சேவைகளை மேம்படுத்தவும், விரைவான முடிவுகளை எடுக்கவும், செயல்திறனை உயர்த்தவும் ‘நிர்வாகக் கூட்டாளியாக’ செயல்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஃபெடரல் ஊழியருக்கும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் மிக வலுவான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அரசாங்க அமைப்பை உருவாக்குவதே இந்த முயற்சியின் பிரதான இலக்காகும்.
“உலகம் வேகமாக மாறுகிறது; தொழில்நுட்ப வளர்ச்சி அதைவிட வேகமாக உள்ளது. எனினும் ‘மக்களே முதன்மை’ என்ற எமது கொள்கை மாறாது. வேகமான மற்றும் தாக்கம் அதிகமான ஆட்சியை உருவாக்குவதே எமது நோக்கம்,” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தை ஷேக் மன்சூர் பின் சையத் மேற்பார்வையிடுவார். இதற்காக மொஹமட் அல் கெர்காவி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு பணிகளை விரைவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
