மீண்டும் நகருக்கு மக்கள் திரும்பல் – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், இன்று (15) பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காலி–பின்னதுவ நுழைவாயிலில் காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது. நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் அவ்வப்போது நெரிசல் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக இன்று முதல் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய போதிய பேருந்துகள் இயக்குமாறு மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று சாதாரண வேலை நாளாக இருப்பதால் அலுவலக தொடருந்து சேவைகள் வழமை போன்று இயக்கப்படுகின்றன. பயணிகள் அதிகரிப்பின் அடிப்படையில் மேலதிக தொடருந்துகள் இணைக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் கூட்ட நெரிசலை தவிர்க்க நேரத்துடன் நிலையங்களுக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top