
புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க, குறிப்பாக பட்டாசு மற்றும் வானவேடிக்கை தொடர்பான செயல்பாடுகளின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதத்தில் பட்டாசு விபத்துக்கள் குறைந்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அதே நிலை புத்தாண்டு காலத்திலும் தொடர வேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும், பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிக்கும் நிலை காணப்படுவதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிவேக ஓட்டம் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதையும், எந்தவொரு சூழ்நிலையிலும் மது அருந்தியபின் வாகனம் செலுத்த வேண்டாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, உணவு பாதுகாப்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சுத்தமான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், கொதிக்கவைத்து குளிர்த்த நீரை அருந்துவது பாதுகாப்பானது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேர சேவைகள் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
