
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ள முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது பதிலைத் தயார் செய்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை ஈரானின் அரச செய்தி நிறுவனம் ‘IRNA’ உறுதிப்படுத்தியுள்ளது. மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டத்தை எந்த நிலையிலும் ஏற்க முடியாது என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“எமது தேசிய நலன்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் எமது தேவைகளை நாங்கள் வடிவமைத்துள்ளோம்” என்று பாகேய் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய திட்டம் ஒன்றை உருவாக்குவதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்து வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், தனது ‘சிவப்பு கோடுகள்’ குறித்து ஈரான் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்து வருவதாகவும், அதற்கேற்ப பதில்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தவறினால், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த ஈரான், “அச்சுறுத்தல்களும் இறுதி எச்சரிக்கைகளும் உள்ள சூழலில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது” என்று கடுமையாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் தயாரித்துள்ள புதிய பதில்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விரிவான தகவல்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
