
குவஹாத்தியில் நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முகாமையாளர் ரோமி பிந்தர் கைபேசி பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, வீரர்களுக்கான ஒதுக்கப்பட்ட பகுதியில் அமர்ந்திருந்த முகாமையாளர் ரோமி பிந்தர், கைபேசி பயன்படுத்தும் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின.
ஐபிஎல் விதிகளின்படி, போட்டி நடைபெறும் போது ‘வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கான பகுதியில்’ கைபேசி அல்லது தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு, இந்த விதிமீறல் தொடர்பாக ரோமி பிந்தருக்கு ‘ஷோ-காஸ்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரோமி பிந்தர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்தே பிசிசிஐ அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
பொதுவாக, இவ்வாறான விதிமீறல்களுக்கு அபராதம் அல்லது குறிப்பிட்ட போட்டிகளில் பங்கேற்கத் தடை போன்ற தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
முன்னதாக, ஐபிஎல் 2026-க்கான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பொறுப்புகள் குறித்து ரசிகர்களிடையே பல விவாதங்கள் நிலவி வரும் சூழலில், இந்தச் சர்ச்சை அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
