
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்திர கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செயலகத்தின் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவித்ததாவது, பயனாளிகள் எந்த சிரமமுமின்றி தங்களுக்குரிய கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் வசிப்பிடப் பகுதிகளுக்குட்பட்ட அஞ்சல் நிலையங்களுக்கு சென்று இந்த நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவு வழங்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் கொடுப்பனவு வழங்கும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 2026 ஜூன் மாதம் முதல் அனைத்து கொடுப்பனவுகளும் வங்கி கணக்குகள் வழியாக மட்டுமே வழங்கப்படும்.
பணப் பரிமாற்றங்களை எளிதாக்கவும், நிதி நேரடியாக உரிய பயனாளிகளிடம் சேர்வதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இன்னும் வங்கி கணக்குகள் திறக்காத பயனாளிகள் விரைவில் கணக்குகளைத் தொடங்கி பதிவு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
