உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும், இலங்கையைச் சேர்ந்த ஒரு கொள்வனவாளர் பீப்பாய் ஒன்றுக்கு 286 அமெரிக்க டொலர் வரை செலுத்தியதாக HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெடரி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக லண்டனிலுள்ள HSBC தலைமையக ஊடகப் பிரிவிடம் விசாரிக்கப்பட்டபோது, CEO வெளியிட்ட கருத்து உண்மையென அவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் விளக்கமளித்தபடி, மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் பெற்றால் பொதுவாக 140 முதல் 150 டொலர் வரை செலவாகும். மேலும் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து மேற்கொண்டால் கூடுதலாக 30 முதல் 40 டொலர் வரை செலவாகும் நிலையில், 286 டொலர் என்பது அதிகபட்சமாக பதிவான விலையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்தக் கருத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முற்றிலும் மறுத்துள்ளது. பீப்பாய் ஒன்றுக்கு 286 டொலர் செலுத்தும் வகையில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலையும் பொருட்படுத்தாமல், உலக சந்தை விலையை ஒப்பிடுகையில் சாதகமான விலைகளிலேயே எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் நாட்டிற்கு வரவுள்ள மசகு எண்ணெய் பீப்பாய்களின் விலை சுமார் 71.99, 111.62, 71.81 மற்றும் 113.29 அமெரிக்க டொலர் அளவிலேயே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
