
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சமீபத்தில் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவரது சொத்து விவரங்களும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தேர்தல் விதிமுறைகளின்படி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், அவரது சொத்து மதிப்புடன், அவர் யாருக்கு யார் கடன் வழங்கியுள்ளார் என்பதற்கான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் வெளியாகியுள்ள தகவலின்படி, விஜய் தனது குடும்பத்தினருக்கே கோடிக்கணக்கில் கடன் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா விஜய் ரூ.12.60 கோடி, தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ரூ.3.02 கோடி, தாய் ஷோபா சந்திரசேகர் ரூ.87.12 லட்சம் கடனாக பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மகன் ஜேசன் சஞ்சய் ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யா சாஷா ரூ.4.6 லட்சமும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளரான என். ஆனந்த் விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் பெற்றுள்ளார் என்பதும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் இதை விவாதித்து வருகின்றனர்.