
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்மொழிந்ததாகக் கூறப்படும் ‘15 அம்ச சமாதானத் திட்டம்’ குறித்து ஈரான் கவனமாக பரிசீலித்து வருவதாக அதன் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை ஈரான் உடனடியாக நிராகரிக்கவில்லை என்றாலும், அதற்கான உத்தியோகபூர்வ நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில ‘15 அம்சத் திட்டம்’ என குறிப்பிடப்படுவதாகவும் கூறினார்.
மேலும், இத்தகைய யோசனைகள் பல்வேறு வடிவங்களில் ஈரானுக்கு கிடைத்துள்ளதுடன், அவை அனைத்தும் நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டுமெனில், அது உயர்மட்ட அரசியல் தலைமையால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால், ஈரான் இத்திட்டத்தை முழுமையாக ஏற்றோ மறுத்தோ விடாமல், இடைநிலை அணுகுமுறையில் இருப்பது தெளிவாகிறது.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விருப்பம் இல்லை என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அதே சமயம், அமெரிக்கா பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் தொடர்ந்து தகவல்கள் மற்றும் முன்மொழிவுகளை அனுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.