
நாளையும் நாளை மறுதினமும் எரிபொருள் விநியோகம் வழக்கம்போல் நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடும் வகையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே விளக்கம் அளித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை கூட்டுத்தாபனம் மூடப்படுவது வழக்கமான நடைமுறை என்றாலும், அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த சனிக்கிழமை மூடப்படும் என்ற தகவல்கள் தவறானவை என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அதிகப்படியான தேவையையும், சனிக்கிழமை இரவு QR குறியீட்டு முறைமை (QR Code) புதுப்பிப்பு நடைபெறவுள்ளதையும் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் கூட்டுத்தாபனம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவையெனில் ஞாயிற்றுக்கிழமையிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும், அதற்கான எந்த தடையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், Ceylon Petroleum Storage Terminals Limited நிறுவனமும் சனிக்கிழமை விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் என்ற தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.