
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
வொஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அவரது பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அனுபவம்
எரிக் மேயர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட சிரேஷ்ட அமெரிக்க வெளியுறவுச் சேவை அதிகாரியாவார்.
தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புதிய தூதுவரை வரவேற்றுள்ளதுடன், அவரது தலைமையின் கீழ் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கவனம்
வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் எரிக் மேயரின் பதவிக்காலம் கவனம் செலுத்தும் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து ஒத்துழைத்து வரும் நிலையில், புதிய தூதுவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
புதிய தூதுவரை கொழும்பில் வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
