நாட்டில் மின்வெட்டு ஏற்படாது – வலுசக்தி அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், இந்த ஆண்டு நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்குத் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பின்பற்றப்பட்ட நடைமுறையில், நிலக்கரியின் தரம் தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஊடாக பெறப்பட்டதாகவும், இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய நடைமுறையின் கீழ் நிலக்கரி தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை நேரடியாக இலங்கை நிலக்கரி நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஊடாக இடம்பெறக்கூடிய நிதி மற்றும் தரம் சார்ந்த மோசடிகளைத் தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, மின்சார உற்பத்திக்குத் தேவையான நீர் இருப்பு தற்போது போதுமான அளவில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர்மின் உற்பத்தியைத் தவிர்ந்தும், மின் உற்பத்திக்குத் தேவையான நீர் வளம் போதுமானதாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 12ஆம் திகதி நிலவரப்படி, 868 ஜிகாவாட் மணிநேர நீர்மின்சார உற்பத்திக்குத் தேவையான நீர் கிடைத்துள்ளதாகவும், தற்போது நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 48 சதவீதம் நீர்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மின்சார உற்பத்தியில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top