இந்தியாவில் 12 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையின் தகவலின்படி, சம்பவம் நடைபெற்ற இடத்தை அடையாளம் காட்டுவதற்காக சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சந்தேகநபரின் தாய், தனது மகன் செய்ததாகக் கூறப்படும் செயலுக்கு ஒருபோதும் மன்னிப்பு இல்லை என்றும், அவன் தனது குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்துவிட்டான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினர் தனது மகன் உயிரிழந்த தகவலை வீட்டுக்கு வந்து தெரிவித்ததாகவும், தனது கணவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் உடலைப் பெறச் செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தனது மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர விருப்பமில்லை என்றும், அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் மிகவும் கொடூரமானது என்பதால், அதற்குரிய தண்டனையை அவர் பெற்றுவிட்டதாகவும் சந்தேகநபரின் தாய் உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளார்.
12 வயது சிறுமி மீது நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியா முழுவதும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேகநபரின் உயிரிழப்பும் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
