தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் நகரில் அமைந்துள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் தகவலின்படி, ஜின்ஜியாங் நகரில் இயங்கி வரும் ‘ஹுய்டெங் ஃபுட்வேர்’ (Huiteng Footwear) தொழிற்சாலையில் நேற்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், 500-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், இருப்பினும் கட்டடத்திற்குள் சிக்கியிருந்தவர்களில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொழிற்சாலையிலிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறும் காட்சிகளும், உயிர் தப்புவதற்காக சில தொழிலாளர்கள் கட்டடத்தின் கூரை மீது தஞ்சமடைந்த காட்சிகளும் சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
