
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தொடரும் நிச்சயமற்ற சூழலும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையும் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்வைப் பதிவு செய்துள்ளன.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 0.45 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 73.28 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.
அதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலை 0.49 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 69.84 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மசகு எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் உலக நிதிச் சந்தைகளிலும் பிரதிபலித்துள்ள நிலையில், ஆசியப் பங்குச் சந்தைகளில் இன்று காலை நடைபெற்ற வர்த்தகத்தில் கலவையான போக்கு காணப்பட்டது.
ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 0.6 சதவீதம் உயர்வைப் பதிவு செய்தது. இதேவேளை, அவுஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 0.4 சதவீதமும், தென்கொரியாவின் கோஸ்பி குறியீடு 1.8 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை 0.1 சதவீதம் உயர்வைக் காட்டிய நிலையில், ஹொங்கொங் பங்குச் சந்தை இன்று மூடப்பட்டிருந்தது.
