
அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-606 விமானம் மின்னல் தாக்கத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, விமானம் புறப்பட்ட பின்னர் மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு, எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
