உலகச் சந்தை விலைகளை விட கணிசமாகக் குறைந்த விலையில் நாட்டின் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதாக அரசாங்கத் தரப்பினர் வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.

ஒரு லீற்றர் எரிபொருளின் உண்மையான விலை சுமார் ரூ.720 எனவும், அதனை ரூ.433 என்ற விலையில் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தக் கூற்றின் அடிப்படை மற்றும் அதன் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2026 ஏப்ரல் மாதத்திற்கான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலை துறைமுகத்திற்கு இறக்குமதி செய்வதற்கான செலவு ரூ.274 ஆக பதிவாகியுள்ளது.
இதனுடன் கப்பல் போக்குவரத்து, காப்பீடு, சேமிப்பு, விநியோகம் மற்றும் நிர்வாகச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து மேலதிக செலவுகளும் சேர்க்கப்பட்ட பின்னரும், மொத்தச் செலவு ரூ.433-ஐத் தாண்டவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், ஒரு லீற்றர் எரிபொருளின் பெறுமதி ரூ.720 என அரசாங்கம் எந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் குறிப்பிடுகிறது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் எரிபொருள் சந்தையில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள சில்லறை விலைக்கே எரிபொருளை விற்பனை செய்து வருகின்றன.
அரசாங்கம் கூறுவது போன்று ஒவ்வொரு லீற்றருக்கும் ரூ.300-க்கும் அதிகமான நட்டம் ஏற்படுகின்ற நிலையில், எந்தவித அரச மானியமும் பெறாத நிறுவனங்கள் அதே விலையில் தொடர்ச்சியாக எவ்வாறு விற்பனை செய்கின்றன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை, உலக எண்ணெய் விலை, மாற்று விகிதங்கள் அல்லது ரூ.720 என்ற மதிப்பு கணக்கிடப்பட்ட காலப்பகுதி குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்திறன் சவால்களை எதிர்நோக்கும் நிலையில், இலங்கை தற்போது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்து வருகிறது. இந்தச் சூழலில், சர்வதேச சந்தை விலைகளை விட அதிகமாக எரிபொருள் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
எனவே, எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான முழுமையான செலவுக் கணக்குகள், வரி விவரங்கள், போக்குவரத்து செலவுகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை வழங்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
