
‘டிட்வா’ சூறாவளி தாக்கம் ஏற்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக சீரடையவில்லை.
வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்து தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலை தொடர்பான விபரங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேகாலை, நுவரெலியா, கொழும்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 465 குடும்பங்களின் 1,337 பேர் இன்னமும் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு மத்திய நிலையங்களில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் தங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் ஒரு மத்திய நிலையத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் தற்காலிக வசிப்பிடங்களில் உள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மத்திய நிலையங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூறாவளியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பதுளை காணப்படுகிறது. அங்கு இயங்கும் 13 நிவாரண மத்திய நிலையங்களில் மட்டும் 1,003 பேர் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
