தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக புதுடெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணம் நிர்வாக மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த மே 27 ஆம் திகதி முதன்முறையாக டெல்லி சென்றிருந்த முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியிருந்தார். மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மேகேதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்காதிருத்தல் மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் அப்போது முன்வைக்கப்பட்டிருந்தன.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து மாநிலத்தின் நிதி தேவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் மீண்டும் டெல்லி செல்லவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மத்திய நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி மற்றும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்த பயணம் அரசியல் ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் விஜய் சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில – மத்திய அரசு உறவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் அவர் சந்திக்கக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. எனினும், இத்தகைய சந்திப்புகள் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால், முதல்வர் விஜயின் டெல்லி பயணம் நிர்வாக நோக்கத்திற்காக மட்டுமா அல்லது அரசியல் ரீதியான முக்கிய சந்திப்புகளையும் உள்ளடக்குமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
