இலங்கையில் ஒரு நபர் தனது அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்கு குறைந்தபட்சமாக 17,117 ரூபா செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாத உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு அறிக்கையின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக் கோட்டின் மதிப்பு 427 ரூபாவால் உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நபருக்கான குறைந்தபட்ச வாழ்வாதாரச் செலவு 16,690 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் அது 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒரு நபர் தனது உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவைப்படும் மிகக் குறைந்தபட்ச செலவின மதிப்பீடே உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டாக கணக்கிடப்படுகிறது.
மாவட்ட வாரியான தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் மதிப்பு அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. அங்கு ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்காக மாதமொன்றுக்கு 18,461 ரூபா தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் குறைந்தபட்ச வறுமைக் கோட்டு மதிப்பு பதிவாகியுள்ளது. அங்கு ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு 16,367 ரூபா போதுமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வறுமைக் கோட்டின் இந்த அதிகரிப்பு பொதுமக்களின் பொருளாதார சுமை மேலும் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
