புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்தில் அவரது உடல் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து தீர்ப்பை அறிவிப்பதற்காக மரண தண்டனை கைதிகள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ஆரம்ப தகவல்களின்படி அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரது உடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அவரது உடல் இன்று கோம்பையன் இந்து மயானத்தில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.
