யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற குறித்த கடற்றொழிலாளர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடற்றொழிலாளர்கள் பயணித்திருக்கக்கூடிய திசைகள் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும், காணாமல் போனவர்களைப் பற்றிய எந்தவொரு உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தேடுதல் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் ஏற்கனவே பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, கடற்படையுடன் இணைந்து வான்படையின் உதவியுடனும் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
