
தெனியாய கல்வி வலயத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையை ஆய்வு செய்து, அதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர்கள் குழு அப்பகுதிக்கு செல்லவுள்ளது.
இந்த தகவலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய நாட்களில் மூடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.
மூடப்பட்ட பாடசாலைகள்:
- தெனியாய மத்திய மகா வித்தியாலயம்
- தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம்
- தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம்
- பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம்
இந்தப் பாடசாலைகளில் மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களிடமும் காய்ச்சல் அறிகுறிகள் பதிவாகியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பரவி வரும் காய்ச்சலின் தன்மை மற்றும் அதன் காரணங்களை கண்டறியும் நோக்கில் கொழும்பிலிருந்து தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு தெனியாயவிற்கு வரவுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க, “பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். இது முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாகும். நிலைமை இதுவரை தீவிரமடையவில்லை” என தெரிவித்தார்.
