மன்னாரில் கணவன் கொலை: சடலம் துண்டாக்கி மலக்குழியில் வீசிய மனைவி கைது

மன்னார் மூர் வீதி பகுதியில் இடம்பெற்ற கொடூர சம்பவமொன்றில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஒருவர் தனது கணவனை கொலை செய்து, சடலத்தை துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மூர்வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தம்பதியருக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை (03), சடலத்தை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் வைத்து வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பெண் தானாகவே மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார், மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் சடலத்தை மலசலகூட குழியிலிருந்து மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 36 வயதுடையவராகவும், கைது செய்யப்பட்டுள்ள மனைவி 29 வயதுடையவராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் மன்னார் பகுதியில் மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top