
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கச்சத்தீவை மட்டுமன்றி முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கச்சத்தீவை கோரியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்கு பதிலாக யாழ்ப்பாணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படும் விஜய்க்கு சபையில் இருந்தபடியே வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அவரது உரையில், வடக்கு தீவுப் பகுதிகளில் நிலவும் மின்சார பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பல குடும்பங்கள் மின்சாரம் இன்றி வாழ்வதாகவும், வாரத்தில் பல நாட்கள் மின்தடை ஏற்படுவது மக்களுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
கச்சத்தீவை வழங்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்பே தெரிவித்திருந்தபோதிலும், “கச்சத்தீவையே அல்ல, முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு வழங்குங்கள்; தமிழக மக்கள் எங்களை கவனித்துக் கொள்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
