
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு, இனி அவர்களின் பிரதான தேரர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் அந்தந்த பீடங்களின் (Chapter) மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகள் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, தற்போது மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது.
மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ், பீடங்களின் பதிவாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் போதைப்பொருள் கையிருப்புடன் நாட்டுக்குள் நுழைந்து, பிக்குகள் போன்று வேடமிட்டு மதத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
