
அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சிரேஷ்ட ஈரானிய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த முன்மொழிவின் முக்கிய நோக்கம் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் திறந்து, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.
மேலும், சிக்கலான அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக ஒத்திவைத்து, பின்னர் அதனை இறுதி கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் எனவும் ஈரான் முன்மொழிந்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உறுதியை வழங்கினால், மோதல் முடிவுக்கு வரும் எனவும் அந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரான் நீரிணையை திறந்தால் அமெரிக்கா தனது முற்றுகையை தளர்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒரு உடன்படிக்கையை எளிதாக்கும் முக்கிய முயற்சியாக கருதப்பட்டதாக ஈரான் தரப்பு கூறியுள்ளது.
