
இந்திய கடல் எல்லையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உண்மையில் கடற்றொழிலாளர்களா அல்லது கடற்கொள்ளையர்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த நோக்கத்திற்காக இந்திய கடல் எல்லைக்குள் சென்றனர் என்பதையும் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தியாவில் இலங்கை நபர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த தாக்குதல் மனித உரிமை மீறலாகும் என்றும், இது அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையை பாதிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் அடிப்படைப் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை மீனவர்கள் இதுவரை “தொப்புள் கொடி உறவு” என்ற உணர்வுடன் மென்மையாக அணுகி வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
