
கொழும்பு நகரில் நாளை (28) நடைபெறவுள்ள ‘சமாதானத்திற்கான நடைபயணம்’ நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல முக்கிய பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வு, மாலை 4.00 மணிக்கு கொழும்பு 07 அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நிறைவடையவுள்ளது.
நிகழ்வை முன்னிட்டு, நாளை காலை 11.00 மணி முதல் நிலைமையைப் பொறுத்து பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவோ அல்லது மாற்றி விடப்படவோ வாய்ப்புள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பொரளை சந்தி வரை, பேஸ்லைன் வீதி, மருதானை வீதி, வார்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமுலாகும்.
மேலும், தர்மபால மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், சுதந்திர மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அத்துடன், பித்தல சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராமய விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும்.
இந்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும், குறிப்பாக நாளை மதியம் கொழும்புக்குள் பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் முன்கூட்டியே தங்களது பயணத்தை திட்டமிடுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
