
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் சிரமத்தை எதிர்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்றும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8.00 மணி வரை (மேலும் 2 மணி நேரம்) நீட்டிக்குமாறு அவர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையில், வாக்குப்பதிவு நிலையங்களில் ரகசியத்தன்மையைப் பேணுவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாக்குச் சீட்டுகளைப் புகைப்படம் எடுப்பதும் அல்லது வாக்களிக்கும் முறையை பதிவு செய்து பகிர்வதும் சட்டவிரோதமானது எனவும், இது குற்றமாக கருதப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், ஒருவர் தனது வாக்கை யாருக்கு அளித்தார் என்பதை வெளிப்படுத்தினால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக காவல்துறை மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
