
இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரித்துள்ளது.
இந்த மோசமான நிலையைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நடைமுறைசார் தீர்வுகளை கொண்டு வர வேண்டும் எனவும் சபை வலியுறுத்தியுள்ளது.
உலகளவில் மருந்து விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் மற்றும் கப்பல் கட்டண உயர்வுகள் விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரூபாயின் பெறுமதி சரிவு மற்றும் இறக்குமதி செலவுகளின் உயர்வு மருந்து இறக்குமதியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் கூடுதல் வரி, சுத்திகரிப்பு செலவுகள் ஆகியவை இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தும் முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தனியார் மற்றும் அரச சுகாதாரத் துறைகளில் தடையின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய, அனுமதிப்பத்திர தாமதங்களை உடனடியாக நீக்குதல், இறக்குமதி செலவுகள் மற்றும் சந்தை விலைகளுக்கிடையிலான சமநிலையை பேணுதல், மேலும் அதிகரித்து வரும் கப்பல் கட்டணங்களை கருத்தில் கொண்டு விநியோக அமைப்பை பாதுகாப்பது அவசியம் என சபை தெரிவித்துள்ளது.
இது ஒரு துறையை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல; முழு நாட்டின் சுகாதாரத்தைத் தாக்கக்கூடிய தேசிய நெருக்கடியாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தரமான மற்றும் பாதுகாப்பான மருந்துகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் உடனடி ஒத்துழைப்புடன் செயல்பட்டு, விரைவான தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என சபை கோரியுள்ளது.
